காரணம் என்ன தெரியுமா?
மோடி, சீமானுக்கு ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள்.

தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் தி.மு.க. ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் சீமானுக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பது தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர் தேர்தல் நாளன்று தங்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த முடியாததால் தேர்தலுக்கு முன்னராகவே அவர்களின் வாக்குகள் சீல் செய்யப்பட்ட கவர்களில் பெறப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு பாதிக்கும் குறைவாக அதாவது 1,11,150 வாக்குகளே கிடைத்துள்ளன. மோடியின் பா.ஜ.க. கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டணிக்கு 50,241 வாக்குகளும் கிடைத்துள்ளன. நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களில் 43 சதவிகிதம் தான் திமுகவை ஆதரிக்கிறார்கள். இரண்டாவது அரசு ஊழியர்களில் அதிமுக நிலைப்பாடு உள்ளவர்களை விட பாஜக நிலைப்பாடு உள்ளவர்கள் அதிகம். நாம் தமிழர் கட்சிக்கும் அரசு ஊழியர்கள் இடையே குறிப்பிடத்தக்க ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மத்தியில் திமுகழக அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதாலே இந்த மாற்றம் என்கிறார்கள். போதுமான அளவுக்கு பணியாளர்கள் இல்லாமல் ஏராளமான திட்டங்கள் அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.
கருணாநிதி கொண்டுவந்த அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். ஜெயலலிதா மற்றும் அடுத்து தி.மு.க. காலத்தில் பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வந்த அரசு ஊழியர்களே அதிகம் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. இவர்களிடம் எந்த நியாயத்தையும் விசுவாசத்தையும் எதிர்பார்க்க முடியாது.
அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து அனைத்து ஜாதியினரையும் உள்ளே நுழைத்தது திராவிட அரசுகள். ஆனால், அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினரை கூலியாட்களாக மாற்றி வரும் பா.ஜ.க.வுக்கும் எந்த தெளிவான சித்தாந்தமும் இல்லாத சீமானுக்கும் அவர்கள் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஆச்சர்யமான மாற்றம்.
பணம் கொடுத்து வேலைக்கு வந்தவர்கள், வேலை பார்க்காமலே சம்பளம் வாங்குபவர்கள், சம்பளத்துக்கு மேல் அதிகம் லஞ்சம் பெறுபவர்கள் சிந்தனை வேறு வழியில் தான் செல்லும். இதனை மாற்ற முடியாவிட்டால் திராவிட அரசுகள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.