YouTube சமையல் தாத்தா திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! விதவிதமாக சமைத்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கியவர்!

ஐதராபாத்: யூ ட்யுப்பில் சமையல் பிரபலமாக வலம் வந்த நாராயணா ரெட்டி காலமானார்.


யூ ட்யுப் வருகையால் பல புதிய பிரபலங்கள் உருவாகியுள்ளனர். வித விதமாக சமைப்பவர், பாட்டு பாடுபவர், நடனமாடுபவர்  என ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தி யூ ட்யுப் வாசகர்களை கட்டிப்போட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணா ரெட்டியும் ஒரு யூ ட்யுப் பிரபலம் ஆவார்.

'Grandpa Kitchen' என்ற பெயரிலேயே யூ ட்யுப் சேனல் நடத்தி வரும் அவர் 60 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை பெற்றிருந்தார். வித விதமான அசைவ உணவுகள் தொடங்கி நொறுக்குத் தீனிகள் வரை ஒரு தெலுங்கு கிராமத்து மணம் வீசும் வகையில் சமைத்து அசத்துவதில் நாராயணா ரெட்டி தனி நிகரானவர்.  

குறிப்பாக, ஒரு முழு ஆட்டை பயன்படுத்தி அவர் பிரியாணி செய்த வீடியோ இன்றைக்கும் பலரால் விரும்பி பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கிராமத்து வாசம் வீசும் உணவுகள் மட்டுமல்ல, சாக்லேட் கேக், பீட்சா போன்றவற்றை கூட சமைப்பதில் நாராயணா ரெட்டி கில்லாடியாக இருந்தார். இந்நிலையில், அவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக, யூ ட்யுப் சேனல் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள அவரது சொந்த ஊரிலேயே நாராயணா ரெட்டி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வாசகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.