தர்மபுரி இளவரசன் சாகவில்லை என்று நீதிபதி சிங்காரவேலு முதல்வரிடம் கொடுத்திருக்கும் அறிக்கைக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார் வன்னியரசு. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.
இளவரசன் செத்தாரா? சாகலையா? நீதிபதி சிங்காரவேலு அறிக்கை! விசிக கொந்தளிப்பு!
தர்மபுரி இளவசரன் தற்கொலை செய்யவில்லை என்று நீதிபதி சிங்காரவேலு ஒரு வழியாக அறிக்கையை முதல்வரிடம் கையளித்துள்ளார். ஜந்தாண்டுகள் பாவம் படாதபாடு பட்டு, காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து விசாரித்த பிறகு இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்துகொண்டார் என்று உண்மையை கண்டுபிடித்துள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா? இந்த உண்மையை கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி செய்த செலவு 2 கோடியே 6 லட்சம் ரூபாய்.
காதல் மனைவி திவ்யா இளவரசனிடமிருந்து பிரிக்கப்பட்ட நாள் ஜூலை4, 2013. அன்று தான் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் குறுதி வெள்ளத்தில் கிடந்தான். அதற்கு முன்பு மகிழ்ச்சியாக கனவன் மனைவியாக சுற்றித்திரிந்தார்கள் திவ்யாவும் இளவரசனும். காதல் வாழ்க்கைக்கு வில்லனாக சாதி வந்ததால் பிரிக்கப்பட்டனர். இதனால் இளவரசன் கொல்லப்பட்டான். இதுதான் உண்மை.
இளவரசனின் உடற்கூறாய்வை மேற்கொண்ட மருத்துவர் சம்பத்குமார் ‘வயர்’ என்னும் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். “ இளவரசன் கொல்லப்பட்டதற்கு தேவையான ஆதாரங்களை விட, தற்கொலை செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் நிறைய இருக்கின்றன” என்றார். இவர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர். தடயநிபுணரும் கூட.
இப்படி நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிபிசிஐடி போலீசும், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவும் தற்கொலை என்றே சொல்லி வந்தனர். இளவரசன் கொல்லப்பட்டதற்கு சாதியமும் அரசியல் பின்னணியும் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்ததுதான். திவ்யாவை இளவரசன் அழைத்துப்போன பின்பு, இளவரசனின் சொந்த ஊரான நத்தம் உள்ளிட்ட மூன்று சேரிகள் சூறையாடப்பட்டன. வீட்டிலிருந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பின்னணியில் பாமக இருந்தது என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. ஆறு மணிநேரத்தும் மேல் மூன்று சேரிகளையும் நின்று நிதானமாக ராமதாசு கும்பல் தீக்கிரையாக்கியது.
இந்த சதி திட்டம் தர்மபுரி உளவு போலீசுக்கு தெரியாமலா இருக்கும்? படையெடுத்து போவதைப்போல போனார்கள். மரங்களை வெட்டிப்போட்டார்கள். காவல்துறை வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களது திட்டம். இப்படியான அத்தனை திட்டங்களுக்கும் உடந்தையாக மாவட்ட காவல்துறை இருந்தது.
ஆனால் நீதிபதி சிங்காரவேலு அவர்கள் மாவட்ட காவல்துறையையும் எஸ்பி அஸ்ரா கார்க்கையும் வானளவு புகழ்ந்து தள்ளியுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது விசாரணை கமிசனின் போக்கு.
உண்மைக்கு மாறாக, அரசு என்ன சொல்கிறதோ அதையே ஐந்தாண்டுகள் விசாரணை என்ற பெயரில் வெளியிட்டிருப்பது ஏமாற்றுவேலை அன்றி வேறென்னவாக இருக்க முடியும்? இளவரசனின் பச்சை படுகொலையை மறைக்க அரசு செய்த செலவு 2 கோடியே ஆறு லட்சமாகும்.
இளவரசனின் படுகொலையில் நீதிபதி சிங்காரவேலு அவர்களிடம் எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும்? இந்த அறிக்கையை வைத்துக்கொண்டுதான் மருத்துவர் ராமதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குதி குதி என்று குதிக்கிறார். கடந்த காலங்களில் கொடியன்குளம் வன்முறை, பரமக்குடி படுகொலை, தாமிரபரணி படுகொலை என்று அத்தனை அரசபயங்கரவாதத்தையும் கண்டித்து அறிக்கை கொடுத்தவர் தான் மருத்துவர் ராமதாஸ். நேரடியாக போலீசு மீது குற்றம் சுமத்தினார். அந்த அரச பயங்கரவாதங்கள் எல்லாம் விசாரசணை ஆணையங்களால் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை கொடுத்துவிட்டனர்.
அதற்காக படுகொலைகளே நடக்கவில்லை என்று ராமதாஸ் மன்னிப்பு அறிக்கை தரமுடியுமா? அதே போலத்தான் இளவரசன் படுகொலை தொடர்பான விசாரணை ஆணையமும். ஆணையங்கள் எல்லாம் அதிகார வர்க்கம் பக்கம் நின்றுதான் பேசும். உண்மை ஒரு போதும் தோற்றுவிடாது. இளவரசன் படுகொலையை நீதிபதி சிங்காரவேலன்களால் மறைக்க முயற்சிக்கலாம். ஆனால், திவ்யாவுக்கு உண்மை தெரியும். திவ்யா ஒரு நாள் பேசுவார். அப்போது ராமதாசு, சிங்காரவேலன்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள்.