கே.பாலசந்தரின் அஞ்சலிக் கூட்டத்தில் வைரமுத்து பேசிய விவகாரம் அவருக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு பரபரப்பாகியுள்ளது.
37 இசையமைப்பாளர்களை கேவலப்படுத்திய வைரமுத்து! கொந்தளிக்கும் ராஜா ரசிகர்கள்!
இளையராஜாவுக்குப் போட்டியாக ஒருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக 37 இசையமைப்பாளர்களை உருவாக்கியதாகவும், அவர்களில் யாரும் ஜெயிக்காமல் போகவே, கடைசியில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்துசேர்ந்தார் என்று பேசியிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவை மட்டம் தட்டுவதாக நினைத்து, அவருக்கு வாய்ப்பு கொடுத்த 37 இசையமைப்பாளர்களையும் கேவலப்படுத்திவிட்டார் என்று வைரமுத்துக்கு கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கும், ராஜாவின் ரசிகர்கள் வலைதளத்தில் கொந்தளித்து வருகிறார்கள். இதோ, அவற்றில் ஒன்று.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்குமான தனிப்பட்ட பிரச்சனையை நாகரிகம் கருதிப் பேசாது ஒதுங்கிய என்போன்ற ரசிகர்கள் இந்தக் கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்று விரும்பியது தவறு என்று நிரூபிக்கிறார் வைரமுத்து.
கவிஞர் வாலியின் திறனைக்கூட இந்த கே.பாலசந்தர் அஞ்சலிக் கூட்டத்தில் உரசிப்பார்க்கிறார் வைரமுத்து. உண்மையில் வைரமுத்துவை விடச் சிறந்த கவி வளம் படைத்த கவிஞர் அவர். ஆனால் ஜனரஞ்சக சினிமாவுக்கு எது தேவை, கலைப்படத்துக்கு இது தேவை என்று நுண்ணுணர்வு படைத்த படைப்பாளி இந்த வாலி. தேவையில்லாமல் தன் வித்துவத்திறமையை அவர் மசாலாவுக்குள் போட்டுக் குழப்பி அடிப்பதில்லை.
கொடுமை என்னவென்றால் இளையராஜாவை ஒதுக்க ரஹ்மானைத் தான் பிறப்பித்ததாகச் சொல்லும் வைரமுத்துவை விலக்கி முழுப்பாடல்களும் வாலி என்று அடுத்த ஆண்டே “உழவன்” படத்தில் சேர்த்துக் கொண்டாரே? அப்படியென்றால் ரஹ்மான் கணக்கில் வைரமுத்து ஒரே ஆண்டில் டொக்காகி விட்டாரா?
அடுத்தது கே.பாலசந்தரை வைரமுத்து தன் வம்புக்கு இழுத்திருப்பது பற்றி. புதுப்புது அர்த்தங்கள் படத்தில் தன்னுடைய கவனத்தை மீறி மரகதமணியை வைத்துப் பின்னணி இசையமைத்ததால் இளையராஜாவுக்குச் சினம் வந்ததாக கே.பாலசந்தர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே ராஜா தன்னிலை விளக்கம் அளித்தவர். அத்தோடு அண்ணாமலை படத்தின் இசையமைப்பு என்ற பெரிய வாய்ப்பையே உதறியவர் ராஜா. அதனால் தான் கே.பாலசந்தர் தேவாவைத் தேட வேண்டியிருந்தது வைரமுத்து அவர்களே.
அத்தோடு சிந்து பைரவி என்ற படத்தில் வைரமுத்து தன் கவித்திறனைக் காட்டியதால் அப்படியே கே.பாலசந்தர் புன்னகை மன்னனைத் தொடர்ந்து இவருக்கொன்றும் அடுத்த படமான மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லையே? மனதில் உறுதி வேண்டும் படத்தின் முழுப் பாடல்களும் வாலியின் கை வண்ணம் ஆச்சே?
வைரமுத்துவுக்காக ராஜாவை ஒதுக்கி வைத்திருந்திருக்கலாமே இயக்குநர் கே.பாலசந்தர் அப்போது? இளையராஜாவை விட்டுப் பிரிந்த பின் ஏவிஎம் நிழலில் தான் வைரமுத்து ஒதுங்கினார். அவர்கள் தொடர்ச்சியாகத் தயாரித்த படங்களில் சந்திரபோஸ் என்ற உன்னத இசையமைப்பாளர், மற்றும் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள், மனோஜ் - கியான், மரகதமணி, தேவேந்திரன், தேவா என்று 37 இசையமைப்பாளர்களின் இசை தன் பாடல்களுக்குப் பொருந்தவில்லையாம். இதை அந்தக் காலத்தில் காக்காய் பிடித்துப் பாட்டு வாய்ப்புக் கேட்கும் போதே சொல்லி விட்டுப் பிச்சை எடுத்திருக்கலாமே வைரமுத்து அவர்களே? முப்பது ஆண்டுகளாகத் தன்னை வளர்த்த இசையமைப்பாளர்களுக்கு இவர் செய்யும் நன்றிக்கடனைப் பாருங்கள்.
உண்மையில் இந்த இசையமைப்பாளர்கள் வைரமுத்துவின் வரிகள் நோகாமல் இசையமைத்த சிறப்பை இசை ரசிகர்கள் நாம் பாரபட்சமின்றி ரசித்துப் போற்றினோமே? இந்த மாதிரி ஒரு ஈனத்தனமான கருத்துக்கு ஒட்டுமொத்த இசையமைப்பாளர் சங்கமே பொங்கியிருக்கணுமே?
தான் உற்பத்தி பண்ணியதாகச் சொல்லும் 37 இசையமைப்பாளர்களில் சந்திரபோஸ் ஐயும் அடக்கியிருக்கிறார். வைரமுத்துவுக்கு முன்பே சந்திரபோஸ் இசையமைப்பாளராகி விட்ட வரலாறும் இவருக்கு நாம் சொல்லிக் கொடுக்கணுமா?
அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத் தன்னையே இசையமைக்க வாய்ப்புக் கொடுக்கும்படி பாலசந்தரைக் கேட்டவர் இளையராஜா என்று சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன். பாருங்கள் ராஜாவுக்கு எப்பேர்ப்பட்ட காழ்ப்புணர்வு.
வைரமுத்துவின் கணக்கில் ராஜாவை ஓரம் கட்ட ரஹ்மானை அறிமுகப்படுத்தினோம் என்றால் மெல்லிசை மன்னர் விஸவநாதன் நினைத்தாலே இனிக்கும் காலத்தைக் கடந்தும் கே.பாலசந்தருக்கு அதே இனிமை சொட்டப் பாடல்களைக் கொடுத்த போதும் எம்.எஸ்.வியை விட்டு இளையராஜாவிடம் போனது மெல்லிசை மன்னரை ஓரம் கட்டவா?
அந்த நேரத்தில் மணிரத்னம் என்ற நட்சத்திர அடையாளம் இல்லாவிட்டால் என்னதான் திறமையிருந்தும் ரஹ்மான் துலங்கியிருப்பாரா? இல்லை வைரமுத்துத்தான் வாய்ப்பு எடுத்துக் கொடுத்திருப்பாரா?
‘டூயட்’ படத்தின் தோல்விக்குப் பின் கே.பாலசந்தர் ரஹ்மானை விட்டு விலகி அடுத்த படமான கல்கியில் தேவாவை இசையமைக்க வைத்ததும், “பார்த்தாலே பரவசம்” படத்தின் படுதோல்விக்குப் பின் கடந்த 18 ஆண்டுகளாக கவிதாலயா நிறுவனத்துக்கோ கே.பாலசந்தருக்கோ ரஹ்மானை இசையமைக்காமல் வைத்திருப்பது கூட இந்த மாதிரி ரஹ்மானை ஓரம் கட்டவே என்று எடுத்துக் கொள்ளலாமா வைரமுத்து அவர்களே?
இளையராஜா ஒருபோதும் இம்மாதிரிப் பேர்வழிகளைத் தன் பக்கம் அண்ட விடக்கூடாது என்பதைக் காலம் கடந்து நிரூபித்திருக்கிறார் வைரமுத்து. உண்மையில் இந்த உலகத்தில் இளையராஜா போன்று வெளிப்படையாக வாழ்வது கஷ்டம், சூது, வாது, காக்காய் பிடிப்போடு வைரமுத்துவாக வாழ்வது வெகு இலகு.