ஒரே ஓர் அறிக்கை மூலம் கூட்டணி விவகாரத்தை கதிகலங்க வைத்தார் கே.எஸ்.அழகிரி. உடனடியாக இரண்டு பக்கத்திலும் கடுமையான உரசல்கள், சிக்கல்கள். கூட்டணி அம்புட்டுத்தான் என்று பேச்சு நிலவியது.
கே.எஸ். அழகிரி இன்று ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்டாரா..?
இந்த நிலையில்தான் இன்று ஸ்டாலினை சந்தித்து அழகிரி மன்னிப்பு கேட்டார் என்று பேசப்படுகிறது. ஏனென்றால், இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மிகவும் கோபம் அடைந்திருக்கிறாராம். தேவையில்லாமல் ஊராட்சி சீட்டுகளுக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல் செய்ய வேண்டாம் என்று சொன்னாராம்.
அதனாலே, நேரடியாகவே ஸ்டாலினை சந்தித்துப் பேசி தன்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொண்டாராம் அழகிரி. தான் மட்டும் தனியே போனால் சரியாக இருக்காது என்றுதான் தங்கபாலு போன்ற வேறு சில தலைவர்களையும் அழைத்துச் சென்று பேசியிருக்கிறார். இப்போது கூட்டணி ஒட்டிக்கொண்டாலும், நிலைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
இந்த நிலையில் அழகிரி சந்திப்பு குறித்து ஸ்டாலின், ‘‘கே.எஸ். அழகிரி அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார். ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும்,
சில ஊடகங்களுக்கும் மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை. ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதை ஆரம்பத்திலே சொல்லியிருக்கலாமே? அதுசரி, அழகிரி மன்னிப்பு கேட்டாரா என்கிறீர்களா? காலில் விழுந்து கேட்டால்தான் மன்னிப்பா?