சைதை துரைசாமியிடம் கோபப்பட்ட ஜெயலலிதா

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 38


சென்னையின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் தொடங்குவதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்குவதற்கு எப்படி அனுமதி கேட்பது என்று முதலில் தயங்கினார் மேயர் சைதை துரைசாமி.

அதேநேரம், மக்கள் நலத் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆகவே, மிகுந்த தயக்கத்துடன் முதல்வரை சந்தித்தார் மேயர் சைதை துரைசாமி.

மிகுந்த பரபரப்புடன் இருந்த முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘’மீண்டும் ஒரு கோரிக்கை’’ என்றதுமே, ’’உங்களுக்கு எதுவும் கேட்க மாட்டீங்கன்னு தெரியும், இப்போ என்ன வேண்டும்?’’ என்று கேட்டார். அரசு மருத்துவமனையில் ஏழைகள் உணவுக்கு அலையும் துயரத்தையும் அங்கு அம்மா உணவகம் தொடங்கவேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.

இதை கேட்டதும் முதல்வர் ஜெயலலிதா சட்டென கோபமாகிவிட்டார். ‘’இது எத்தனை நல்ல திட்டம். இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுவார்கள். இது போன்ற நல்ல திட்டம் தொடங்கவேண்டும் என்றால், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பேசுங்கள், நான் வேறு ஏதோ ஒரு கோரிக்கை என்று நினைத்துவிட்டேன். இத்தனை நல்ல திட்டம் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம். ஏழை மக்களுக்குப் பயன்படும் என்றால் மருத்துவமனை மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும் தொடங்கலாம். முதலில் மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்’ என்று உத்தரவு கொடுத்தார்..

சைதை துரைசாமியின் மனிதநேயத்தையும், அவர் எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே தன்னிடம் கொண்டுவருவர் என்பதையும் ஜெயலலிதா நன்கு அறிவார். ஆகவே, முதல் பேச்சுவார்த்தையிலே சைதை துரைசாமியின் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தார் ஜெயலலிதா.

இதனைத் தொடர்ந்து சென்னையில் எப்போதும் கூட்டம் நிரம்பிவழியும் ஏழு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டன. அம்மா உணவகம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தகைய மகிழ்ச்சி கொடுத்தது என்பதற்கு அவர் பேசிய உரையில் இருந்தே அறிந்துகொள்ளலாம்.

- நாளை பார்க்கலாம்.