நள்ளிரவு நேரம் என்றுகூட பாராமல், பெண் பயணியை சாலையில் ஓடவிட்ட கல்லடா டிராவல்ஸ்க்கு கண்டனம் குவிந்து வருகிறது.
நள்ளிரவில் பெண் பயணிக்கு கல்லடா டிராவல்ஸ் டிரைவரால் ஏற்பட்ட விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!
ஸ்டெல்லா என்ற பெண், பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர், திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி ஞாயிறன்று இரவு பயணித்துள்ளார். அதுவும் அவர் பயணித்த பேருந்து சாதாரணமானதல்ல. சமீபத்தில் 2 இளைஞர்களை, ஏன் லேட்டு எனக் கேட்டதற்காக, அடித்து உதைத்த பெருமையை கொண்ட, கல்லடா டிராவல்ஸ் கம்பெனி பேருந்துதான் அது.
திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட கல்லடா டிராவல்ஸ் பேருந்து, வழியில், இரவு 10.30 மணியளவில், திருநெல்வேலியில் டின்னர் சாப்பிட நின்றுள்ளது. ஸ்டெல்லாவும் கீழே இறங்கிச் சென்று, சாப்பிட்டுள்ளார். ஆனால், அவர் சாப்பிட்டு வரும் முன்பே, எந்த கவனமும் இன்றி, பேருந்து புறப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா, பேருந்தை துரத்தியபடி ஓடியுள்ளார். அங்கே நின்ற பொதுமக்கள் பலரும் சத்தம் போட்ட பிறகும், டிரைவர் அந்த பேருந்தை நிறுத்தவே இல்லை எனக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஸ்டெல்லா பேருந்தை துரத்தியபடி ஓடவே, வழியில் அவரை பார்த்து பரிதாபப்பட்ட கார் ஒன்று, வேகமாகச் சென்று, அந்த பேருந்தை மடக்கி பிடித்துள்ளது. ஆனால், பேருந்தை ரிவர்ஸ் எடுக்க டிரைவர் மறுத்துவிட்டாராம். வேறு வழியின்றி, ஸ்டெல்லா ஓடிச் சென்று, பேருந்தை பிடித்துள்ளார். சுமார் 5 நிமிடங்கள் இப்படி அவர் சாலையில் ஓட நேரிட்டதாகக் கூறுகிறார்.
இதுபற்றி டிரைவரிடம் முறையிட்டதற்கு, அவர் மிகக் கடுமையாக பேசியுள்ளார். வீண் வம்பு வேண்டாம் என்ற நோக்கில், ஸ்டெல்லா அமைதியாக, சீட்டில் அமர்ந்து, பெங்களூரு சென்று சேர்ந்துள்ளார். கல்லடா டிராவல்ஸ் ஊழியர்கள் இப்படி பயணிகளிடம் கடுமையாக நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. அடிக்கடி அந்நிறுவனத்தின் சேவை மீது பயணிகள் புகார் தெரிவிக்கும் சூழலில், இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா, என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.