கர்நாடகா தான் வேலை கொடுத்தது! நெகிழும் கோமதி மாரிமுத்து!

விளையாட்டு வீராங்கனையான தன்னை ஊக்கப்படுத்தும் வகையில் தனக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது கர்நாடக அரசுதான் என்று கோமதி மாரிமுத்து கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கோமதி மாரிமுத்து பேசியதாவது: திருச்சி அருகே உள்ள சிறிய கிராமம் ஒன்றிலிருந்து சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வாகியிருப்பது என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. சர்வதேச அளவிலான தடகள வீராங்கனை களை உருவாக்கு வதற்கான வசதி தமிழகத்தில் எங்குமே இல்லை. திருச்சியில் உள்ள மைதானத்தில் ஓடி பழக என்னுடைய கிராமத்திலிருந்து பேருந்திலேயே வந்து செல்வேன். இதனால் ஏற்படும் களைப்பு என்னுடைய பயிற்சியை பாதித்தது.

உதவிக்காக அரசு தனியார் அமைப்புகள் என பலரையும் நாடினேன். யாரும் உதவி செய்யவில்லை. பிறகு என்னுடைய திறமையை உணர்ந்து கர்நாடக அரசுதான் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. அதன் பிறகுதான் பயிற்சியை தீவிரப்படுத்தி தற்போது சாதனை படைத்துள்ளேன். அந்த வகையில் கர்நாடக அரசை ஒருபோதும் மறக்க மாட்டேன். தற்போது எனக்கு நிறைய பண உதவியும் பொருளுதவியும் வருகிறது.

எனக்கு அனைவரும் கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இன்னும் பல்வேறு கிராமங்களில் என்னைப்போன்ற ஏழ்மை நிலையில் உள்ள இளம் விளையாட்டு வீராங்கனைகள் உதவிக்கு ஏங்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு கோமதி மாரிமுத்து பேசினார்.