அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறதா..?

மல்லுக்கட்டும் மாஜிக்கள்


தமிழகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு தேர்தல் தோல்விக்குப் பரிசாக கவர்னர் பதவி கொடுக்கப்பட்டது. அதேபோல் எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கபப்ட்டது. அதேபோல் இந்த முறை அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அண்ணாமலைக்கு பதவி கொடுக்கக்கூடாது என்று இரண்டு பேர் கடும் போட்டியில் இருக்கிறார்கள். கடந்த 2014 ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணனும், 2019 ஆட்சியில் எல்.முருகனும் அமைச்சராகப் பதவிக்கு வந்தார்கள். இவர்களும் பதவி வேண்டி அவரவருக்கு வேண்டப்பட்ட தலைவர்கள் மூலம் காய் நகர்த்திவருகிறார்கள்.

அதேநேரம், டெல்லி பா.ஜ.க.விலும் எக்கச்சக்க குழப்பம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. இதுவரையிலான இரண்டு காலகட்டத்திலும் பெரும்பான்மை இருந்த காரணத்தால் எளிதாக அனைவருக்கும் கட்சிப் பதவியும் கவர்னர் பதவியும் கொடுக்க முடிந்தது. ஆனால் இப்போது மைனாரிட்டி ஆட்சி என்பதால் வேண்டியவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாமலே மோடியும் அமித் ஷாவும் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.

அதனால் தான், பாஜக எம்பிக்கள் கூட்டம் நடத்தாமல் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் மட்டுமே நடத்தி மோடி மந்திரிசபை அமைக்க போவதாக கூறப்படுகிறது. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தினால் அமைச்சர் பதவிக்கு அடிதடி நடக்கும், கோஷ்டி பூசல் வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதால் இப்படியொரு திட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.

தமிழகத்திற்கு மந்திரி பதவி கிடைக்குமா என்பதே இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.