மைனாரிட்டி மோடியை ராகுல் வேடிக்கை பார்க்கட்டும்

அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை


விசித்திரமான தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அசுர பலத்துக்கு ஆசைப்பட்ட பா.ஜ.க. 240 என்ற எண்ணுக்குள் சுருங்கிவிட்டது. ஐம்பதைத் தொடாது என்று ஆருடம் சொல்லப்பட்ட காங்கிரஸ் 100 தொகுதியைத் தொட்டுள்ளது. கூட்டணிகள் சேர்ந்தாலும் 240 தொகுதிகளைத் தாண்டவில்லை என்பதே உன்மை.

அதேநேரம், இதுவரை தேர்தல் தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்றுவதற்கு அமித் ஷா அரசியல் சூதாட்டம் ஆடினார். அதேபோன்று ஒரு சூதாட்டத்தை ராகுல் காந்தி நிகழ்த்த வேண்டும், எப்படியாவது இண்டியா கூட்டணி ஆட்சியில் அமரவேண்டும் என்று அவரது கட்சியினர் பலரும் ஆலோசனை கூறுகிறார்கள்.

இண்டியா கூட்டணியில் ஏற்கெனவே அங்கம் வகித்த நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் பா.ஜ.க. எனும் குதிரையின் கடிவாளம் இருக்கிறது. அவர்கள் இருவரையும் திசை திருப்பினால் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வர முடியும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஒரு வகையில் இது சாத்தியம் என்றாலும் ராகுல் இப்போது அமைதியாக வேடிக்கை பார்ப்பதே நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதாவது, ‘’இது வரை வெற்றி மட்டுமே கண்ட பா.ஜ.க. இப்போது தோல்விக்குப் போயிருக்கிறது. இனி, பா.ஜ.க.வின் உண்மையான முகத்தைப் பார்க்க முடியும்.

ஆகவே, இப்போது பெரிய கட்சியான பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைத்து அவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்துவது மட்டுமே ராகுலின் வேலையாக இருக்க வேண்டும். அதேநேரம், இந்த தேர்தலில் எங்கெல்லாம் கட்சிக்கு வாக்குகள் குறைவாகக் கிடைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் வாக்குகளை அதிகரிக்கும் செயலில் இறங்க வேண்டும். அதிகபட்சம் ஆறு மாதங்களில் கூட்டணி ஆட்சியில் குளறுபடி நடந்துவிடும். அப்படியில்லை என்றாலும் வலிமையான எதிர்க்கட்சிகள் இருப்பதால், அவர்கள் இஷ்டத்துக்கு எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

ஆகவே, வாய்ப்பு இன்னமும் நெருங்கிவரும் வரையில் ராகுல் காத்திருக்க வேண்டும். குறிப்பாக பா.ஜ.க. கூட்டணி தானாக உடைந்து இண்டியா கூட்டணிக்கு வரும் வரையில் ராகுல் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார்கள்.

இது தான் ஜனநாயக நடைமுறை. இதையே ராகுல் செய்வார் என்று நம்பலாம்.