என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 26
அம்மா உணவகத்திற்கு வித்திட்ட நாடோடி மன்னன்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் வெளியான, ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக இருக்கும். அந்த அறிமுகக் காட்சியில் எம்.ஜி.ஆர்., ‘வேலை கொடு’, ‘சோறு போடு’, ‘உணவு கொடு’, ‘மன்னர் ஆட்சி ஒழிக’ என்று புரட்சிக்குத் தலைமையேற்று ஊர்வலம் நடத்துவார். ‘மக்களுக்கு வேலை, உணவு தரவேண்டியது அரசின் கடமை’ என்று படம் முழுக்க அழுத்தமாக சித்தரித்திருப்பார்.
’உணவு கொடு’ என்ற புரட்சித்தலைவரின், ‘நாடோடி மன்னன்’ படத்தின் தாக்கமும், ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் கோபாவேசமும் சைதை துரைசாமியை அதிகம் பாதித்தது. ஆகவே, சேவை மனப்பான்மையுடன் ஆரோக்கிய உணவகம் ஒன்று தொடங்கவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தார்.
உணவு என்றாலே தமிழகத்தில் இரண்டு தலைவர்கள் முகமே மக்கள் நினைவுக்கு வரும், அவர்கள் பெருந்தலைவர் காமராஜரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்தான். அவர்கள் வழியில் செல்வதற்கு சைதை துரைசாமியும் ஆசைப்பட்டார்.
காமராஜர் போட்ட விதை
அரசாங்கம் இலவசக் கல்வி கொடுத்தாலும் பள்ளிக்கு வரவிடாமல் பிள்ளைகளையும் பெற்றோரையும் வயிற்றுப் பசி தடுக்கிறது என்ற உண்மை பெருந்தலைவர் காமராஜருக்குத் தெரியவந்தது. மதியம் இலவச உணவு கொடுத்தால், அதனை சாப்பிடுவதற்காவது பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்கள் என்ற காமராஜரின் சிந்தனையே மதிய உணவுத் திட்டமாக உருமாறியது.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்டது. 40 பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது அதிகபட்சம் 10 குழந்தைகளாக இருந்தனர். மேலும் பள்ளி செயல்பட்ட தினங்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றம்
காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்றால் அதை மகத்தான திட்டமாக மாற்றியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து நாட்களும் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, 2 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.
வளரும் குழந்தைகளுக்கு உணவில் அனைத்து சத்துக்களும் கிடைக்கவேண்டும் என்பதால் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார். இந்த சத்துணவுத் திட்டத்தால் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் எம்.ஜி.ஆர். புகழ் பரவியது. அதனால்தான் மரணம் வரையிலும் எம்.ஜி.ஆரின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை.
இந்த மாபெரும் தலைவர்களைத் தாண்டி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சைதை துரைசாமி. அதற்காக சொந்தச் செலவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினார்.
- நாளை பார்க்கலாம்