ஜனாதிபதிக்கு புதிய மரியாதை
மோடியின் பவ்யத்தில் இருக்கிறது ஐந்தாண்டு ஆட்சி
ஜனாதிபதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலே நாடாளுமன்றத்திற்கும் ராமர் கோயிலுக்கும் அழைக்காமல் புறக்கணிப்பு செய்த நரேந்திர மோடி இப்போது பவ்யமாகவும், அடக்கமாகவும் அவருக்கு வணக்கம் வைப்பதையும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதையும் பார்க்க முடிகிறது.
மைனாரிட்டி அரசு என்பதாலே இந்த அடக்கம் புதிதாக வந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை, அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை இனியாவது பா.ஜ.க. புரிந்துகொள்ள வேண்டும்.
தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அசைக்கவே முடியாத சக்தி பா.ஜ.க. என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்... தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது.
ஜனாதிபதியை புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காமல் இருக்கலாம்... நீங்கள் கட்டிய ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்காமல் இருக்கலாம்... எத்தனை வழிகளில் முடியுமோ அத்தனை வழிகளிலும் அவமானப்படுத்தலாம்... ஆனால் மக்கள் சக்தி என்பது, எல்லாவற்றையும் சமன் செய்ய வல்லது என்பதை இப்போது மோடி புரிந்திருப்பார்.
இப்போது காட்டும் பவ்யமும், பணிவும் நீடித்தால் மட்டுமே அவரால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும்.