தீர்மானம் போட்டால் செல்லாது... அமைச்சர் உதயகுமார் பதிலுக்கு இஸ்லாமியர்கள் கொந்தளிப்பு.

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் இஸ்லாமியர் போராட்டம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது.


நாடு முழுவதும் 13 மாநிலங்களில் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஆனால், அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘‘என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால், அந்தக் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. மேலும், பாராளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது.

எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக பொய்யான தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை’’ என்று கூறினார். உதயகுமார் கூறிய பதில் உண்மைக்கு மாறானது என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் பத்திரிகையாளர்களிடம், ‘‘பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதனையே இவர்களும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 40 இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றாலும் எந்த பயமும் வேண்டாம் என அரசு சொல்கிறது.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராடுவோம்’’ என்றார். சட்டமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அபுபக்கரை, இதனையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக தமிமுன் அன்சாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.