ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பயணிக்க வசதியாக, ரூ.191 கோடியில் சொகுசு விமானம் வாங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பயணிக்க ரூ.191 கோடிக்கு சொகுசு விமானம்..! வாய் பிளக்க வைக்கும் வசதிகளுடன் தயார்!
குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. விஜய் ரூபாணி அக்கட்சி சார்பாக, முதல்வர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் குஜராத் ஆளுநர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிப்பதற்காக ரூ.191 கோடி மதிப்பிலான சொகுசு விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான பணி திட்டமிடப்பட்ட நிலையில், Bombardier Challenger 650 ரக விமானம் தற்போது வாங்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 12 பேர் 7000 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இன்னும் 2 மாதங்களில் இந்த விமானம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்று குஜராத் மாநிலத்திற்கான விமானப் போக்குவரத்து இயக்குனர் கேப்டன் அஜய் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குஜராத் மாநில அரசின் விவிஐபிகள் பயணிப்பதற்காக Beechcraft Super King விமானம் பயன்பாட்டில் உள்ளது. இது 870 கிலோ மீட்டர்
வரை மட்டுமே பயணிக்கக் கூடியதாகும். இது கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிலையில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதை தொடர்ந்து,
புதிய விமானம் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.