தலைநகர் டெல்லியில் அமைதியாக ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது திடீரென ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தால் நாடு இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதநிலையில், அதைப் போல இன்னொரு சம்பவம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.
டெல்லியில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்... - பெண்கள் போராட்டத் திடலில் துப்பாக்கியால் சுட்ட நபர். ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியா?
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்துவரும் நிலையில், டெல்லியின் சாகின் பாக் பகுதியில் 45 நாள்களுக்கும் மேலாக இடைவிடாத போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, இந்தப் போராட்டத்துக்கு பெண்களே தலைமைவகித்துவருகிறார்கள்.
இதையொட்டியும் முன்னைய போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், டெல்லி, ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்னர், அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அதில் திடீரெனப் புகுந்த ஆர்.எஸ்.எஸ். சார்புடைய இளைஞன் ஒருவன், ஊர்வலத்தினர் மீது கைத்துப்பாக்கியால் சுட்டான். அதில் ஒரு மாணவரின் கையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதைத் தடுக்கவேண்டிய போலீஸ் படையினர், வெறுமனே நின்றது கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் உண்டாக்கியது.
அதன் சூடு இன்னும் ஆறாதநிலையில், சாகின் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்திவரும் பகுதியில், இன்று மாலை ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். நல்லவேளையாக அங்கிருந்த போலீசார் அவனைப் பாய்ந்துசென்று பிடித்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
முதலில் அவன் அந்தப் பகுதியில் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் உடனே போலீசார் அவனைப் பிடித்துவிட்டதாகவும் டெல்லி போலிஸ் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கைதான நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தலைநகரில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் முக்கிய நாளான இன்றைய தினம், இப்படியொரு பாதுகாப்புக் குறை எப்படி நேர்ந்தது என்று கண் சிவக்கிறது மத்திய அரசு.