என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 44
இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்
காலை, மதியம் என இரண்டு வேளை மட்டும் இயங்கும் வகையில்தான் அம்மா உணவகத்தை மேயர் சைதை துரைசாமி முதலில் வடிவமைத்திருந்தார். மக்களின் அமோக வரவேற்பை பார்த்ததுமே இரவு நேரத்திற்கும் இதனை நீட்டிக்கும் எண்ணத்தில் இருந்தார். இந்த நேரத்தில் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட பலரும் இரவு உணவுக்கு வேண்டுகோள் வைத்தார்கள்.
இதையடுத்து இரவு நேரத்திலும் உணவு கொடுத்துவிட முடிவு செய்து மீண்டும் முதல்வரை சந்திக்கச் சென்றார். இதற்கும் ஜெயலலிதாவிடம் இருந்து உடனடியாக அனுமதி கிடைத்தது. இரவு நேர உணவு கூடுதல் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சப்பாத்தி கொடுப்பதற்கு முடிவு எடுத்தார். இரண்டு சப்பாத்தியுடன் பருப்புக் கடைசல் 3 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கோதுமையும் ரேசனில் இருந்து மானிய விலையில் பெற்றுக்கொண்டதால், இரண்டு சப்பாத்தி தயாரிப்புக்கான அடக்கவிலை 1.50 ரூபாய் மட்டுமே ஆனது என்பது வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம். சப்பாத்திக்கு வழங்கப்படும் பருப்புக் கடைசல் ருசியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் சைதை துரைசாமி. ஆகவே, இரவு நேர சப்பாத்தியும் அம்மா உணவகத்தில் சூப்பர் ஹிட் அடித்தது.
ஒருவரிடம் 20 ரூபாய் மட்டும் இருந்தாலே, ஒரு நாள் முழுவதும் வயிறு நிரம்ப சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு அம்மா உணவகம் தன்னுடைய சேவையை திறம்பட செய்தது. அந்த வகையில் ஒரு மனிதனுக்கு ஒரு மாத உணவிற்குத் தேவையான செலவு 450 ரூபாய் மட்டுமே ஆனது. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 2,000 ரூபாய் இருந்தாலே தாராளம் எனும் அளவுக்கு ஏழை மக்கள் வயிற்றில் பால் வார்த்தது அம்மா உணவகம்.
இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டதால், கூட்டம் கட்டுங்கடங்காமல் மலிவு விலை உணவகத்தை நோக்கி மக்கள் படை எடுத்தன. எவ்வளவு உணவு தயார் செய்தாலும், அத்தனையும் உடனுக்குடன் தீர்ந்துபோயின.
இந்த அம்மா உணவகத்தின் மாபெரும் வெற்றியும் மக்களின் உண்மையான பாராட்டும் 2016 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என்று மேயர் சைதை துரைசாமியிடம் உளவுத் துறை அதிகாரி ஒருவர் மனம் திறந்து பேசினார்.
- நாளை பார்க்கலாம்.