பட்ஜெட்டில் உருப்படியா என்னதான் இருக்குது..? தேவையில்லாத அம்சங்களே அதிகம்.

இந்த ஆட்சி சிலை வைப்பதற்கும், அருங்காட்சியகம் அமைப்பதற்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. ஆம், இன்றைய பட்ஜெட் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.


ஆனால், அப்படி உங்களை யார் எதிர்பார்க்கச் சொன்னது என்ற வகையில் வழக்கம்போல் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட இருக்கிறதாம். அவற்றில் ஒன்றாக ஆதிச்சநல்லூர் இடம் பெற்றுள்ளது. இதனால் பொருளாதாரம் உயருமா என்பதை சீதாராமன்தான் சொல்ல வேண்டும்.

கடந்த பட்ஜெட்டில் என்ன சொன்னாரோ, அதையே மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொல்லி இருக்கிறார். அதாவது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக இருக்கிறதாம். விவசாயத்துறைக்கு 2.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இதில், விவசாயிகளின் நலனுக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் அறிவித்து இருக்கிறார்.

ஒவ்வொன்றாக விற்பனை செய்வதற்கு முடிவெடுத்திருக்கும் நிர்மலா சீதாராமன் கண்ணில் இப்போது எல்.ஐ.டி. பட்டுவிட்டது. அதனால் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்து, அதனை ஒழித்துக்கட்டுவதற்கு முக்கியம் கொடுத்துள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து நிறைய தேஜஸ் வகை ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தனியார் நலன் காக்க இதைகூட செய்யவில்லை என்றால் எப்படி? இவ்வளவையும் செய்துவிட்டு, இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. 10% வளர்ச்சி அடையும் என்று தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அவருக்கு ரொம்பவும்தான் குறும்பு.