ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 31


முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்த பிறகும் மலிவு விலை உணவகத்தைக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தாமதம் செய்துவந்தனர். அவர்களுக்கு இந்த திட்டம் குறித்து போதிய புரிதல் இல்லை என்பதை உணர்ந்தார் மேயர் சைதை துரைசாமி. ஆகவே, மலிவு விலை உணவகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு பக்காவாக திட்ட அறிக்கை தயார் செய்தார்.

மலிவுவிலை உணவகம் எப்படி அமையவேண்டும், சமையலறை, விற்பனைக்கூடம், சாப்பிடும் இடம், ஸ்டோர் ரூம், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்தையும் சைதை துரைசாமி அதற்குரிய நபர்களைக் கொண்டு வடிவமைப்பு செய்தார்.

ஒவ்வொரு இட்லியும் சுமார் 65 முதல் 70 கிராம் வரை இருக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள் தயார் செய்யமுடியும் என்பது வரையிலும் கணக்கிட்டார். உணவு நேரடியாக ஏழை மக்களைச் சென்றடைகிறது என்பதால், அரிசி மட்டும் அரசிடம் இருந்து மானிய விலையான 1 ரூபாய்க்குப் பெற வேண்டும் என்று கணக்குப் போட்டார். அரிசி தவிர உளுந்தம்பருப்பு, சாம்பாருக்கு காய்கள், பருப்பு, எண்ணெய், தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் தேவைப்படும் என்றாலும், இட்லி 1 ரூபாய் என்ற விலை நிர்ணயம் செய்தால் போதும். இந்த வகையில் ஒரு கிலோவுக்கு இட்லி மூலம் 65 ரூபாய் வருமானம் வரும் என்று கணக்குப் போட்டார்.

அதேபோன்று, ஒரு கிலோ அரிசியில் எத்தனை வகை சாதம் தயார் செய்யமுடியும் என்றும் சோதனை ரீதியில் தயார் செய்து பார்க்கப்பட்டது. சாம்பார், தயிர் அல்லது கதம்ப சாதம் போன்றவை ஒரு கிலோவுக்கு, 12 சாதங்கள் தயார் செய்யலாம் என்று தெரியவந்தது. ஒரு சாதம் 5 ரூபாய் என விற்பனை செய்வது நியாயமாகவும் கட்டுப்படியாகவும் இருக்கும் என்பது உறுதியானது.

இந்த மூலப்பொருட்கள் தவிர எரிபொருள், வேலையாட்கள் சம்பளம் போன்ற அனைத்தையும் கணக்கிட்டாலும்கூட, நஷ்டமின்றி நடத்த முடியும் என்பது உறுதியானது. இதனை மீண்டும் மீண்டும் பல முறை சோதனை செய்து, தன்னுடைய கணக்கு சரிதான் என்பதை சைதை துரைசாமி உறுதிப்படுத்தினார். அதன்பிறகு, முக்கிய அதிகாரிகளை நேரில் சந்தித்தார் சைதை துரைசாமி.

- நாளை பார்க்கலாம்