வெளியே வர இத்தனை நாட்கள் ஆகுமா?
சென்னையில் வைகோவுக்கு அறுவை சிகிச்சை…
வைகோவுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கும் சூழலில், அவர் பொதுவெளிக்கு வருவதற்கு மூன்று வார கால ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் அடவைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
ம.தி.மு.க. கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க தலைவர் வைகோ திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார்.
அங்கு எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
வைகோவுக்கு கடுமையான வலி இருப்பதாலும் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாலும் யாரும் சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சிகிச்சைகள் முடிந்து பொதுவெளிக்கு வருவதற்கு மூன்று வார காலம் ஆகுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.