கண்ணீர் சிந்தும் நாம் தமிழர் தம்பிகள்
விஜயகாந்த், வைகோ வழியில் சீமான் எனும் ஜோக்கர்
அரசியலில் பெரும் மாற்றம் தருவார் என்று தமிழக மக்களிடம் நம்பிக்கை விதைத்த இரண்டு தலைவர்கள் கடைசியில் ஜோக்கராக மாறிப் போனார்கள். ஆம், வைகோவுக்கும், விஜயகாந்திற்கும் மக்கள் நிறைய மதிப்பு கொடுத்து நம்பிக்கை வைத்தார்கள்.
ஆனால், அவர்கள் மக்களுடைய ஆதரவை சரியான முறையில் பயன்படுத்தாமல் வீணாக்கியதுடன், தங்களைத் தாங்களே ஜோக்கராக மாற்றிக்கொண்டார்கள். இப்போது அதே வழியில் சீமானும் செல்கிறார். இதுவரை ஒரு தேர்தலில் கூட சீமான் வெற்றி பெற்றதில்லை. ஆனால், குறிப்பிட சதவிகித வாக்குகளை மட்டும் பிரித்துவிடுகிறார். இதனால் யாருக்கும் எந்த பிரயோஜமும் இல்லை என்பது தனிக்கதை.
இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை 8.22% வாக்குகள் பெற்றுள்ளது ஆச்சர்யமான விஷயம். இத்தனைக்கும் அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. புதிய சின்னத்தை வைத்து குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
அதேநேரம், 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் பறி கொடுத்துள்ளது. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு எம்.பி. சீட் பெற வேண்டும். அதுவும் நாம் தமிழர் கட்சிக்கு நடக்கவில்லை. அதேநேரம், 15 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சம் வாக்குகளை தாண்டி இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் சீமானை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வி. அரசியல் அதிகாரம் இல்லாமல் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இது போல் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நின்றால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் ஒரு தேர்தலிலும் ஜெயிக்கவே முடியாது.
சீமானை நம்பி கைக்காசை போட்டு நிறைய பணம் செலவழிக்கிறார்கள். தெருத்தெருவாக மீட்டிங் போட்டு பேசுகிறார்கள். திரள்நிதி வழங்குகிறார்கள். இது மட்டுமே போதும் என்று சீமான் நினைத்துவிட்டாரா என்பது தான் நாம் தமிழர் தம்பிகளின் கேள்வி.
சீமான் மாற வேண்டிய தருணம் இது. கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றால் திராவிடர் கழகம் போன்று தேர்தலை சந்திக்காமல் மக்கள் சேவையில் சீமான் இறங்க வேண்டும்.