டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வரிசையாக அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர்.
எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்! காலியாகும் டிடிவி கூடாரம்! நெல்லை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!
நாடாளுமன்றத் தேர்தல் முன்புவரை அதிமுக மற்றும் திமுக விற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தினகரன் மிகப்பெரிய காமெடியனாகி விட்டார். வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே தினகரன் கட்சி பெற்றதால் அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
தினகரன் கட்சி ஆரம்பித்தபோது அதிமுகவிலிருந்து விலகி அந்தக் கட்சியில் சேர்ந்து பொறுப்புகள் பெற்ற பலரும் சத்தமில்லாமல் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்று காலை அதிமுகவில் இணைந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது பசுமை வழிச்சாலை இல்லத்தில் சந்தித்த மைக்கேல் ராயப்பன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர்.
தேமுதிகவில் எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் ராயப்பன் ஜெயலலிதாவை சந்தித்து தேமுதிக எம்எல்ஏ ஆகினார். பிறகு அதிமுகவில் இணைந்த அவர் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தினகரன் கட்சியில் இணைந்த மைக்கேல் ராயப்பன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மைக்கேல் ராயப்பன். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலரும் அதிமுகவிடம் தொடர்பில் உள்ளனர். இதேபோல் சிலர் திமுகவுடனும் பேசி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் இவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி அந்த கூடாரத்தை காலி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.