இடைத்தேர்தலுக்கு தி.மு.க. ரெடி
ஜெட் வேகத்தில் ஸ்டாலின் வேட்பாளர் அறிவிப்பு
இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி ஆவதற்குள் வேட்பாளரை அறிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய சாதனை படைத்திருக்கிறார். இன்னமும் எதிர்க்கட்சிகள் தூக்கத்தில் இருந்தே விழிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூன் 21ம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேநேரம், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவரும் செஞ்சி மஸ்தான் அந்த பதவியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் சிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.