புதுமைப் பெண் போன்று தமிழ்ப் புதல்வன்
மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் திட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவர்களுக்கான ஒரு புதிய திட்டம் குறித்துப் பேசினார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’மிகக் கடுமையான இந்தக் கோடை காலத்தில், குடிநீர் பிரச்சினை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்ட உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாம் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்து, திட்டங்களின் பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை மக்களுடன் உரையாடிய எனது நேரடி அனுபவங்களில் இருந்தே சொல்கிறேன்.
நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இருக்கிறது. இதனை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்களான உங்களுக்கு என்னுடைய நன்றி.
அடுத்து வரப்போகும் நாட்களிலும் இன்னும்பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள். இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள்! புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க –
* சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு;
* சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்;
* கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்;
* பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்; ஆகிய நான்கு குறிக்கோள்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள்!
இன்னொரு மிக முக்கியமான ஒரு கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது! போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்னை! எனவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சித் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் – தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். “போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்” என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்களுக்கும் யோகம் வந்தாச்சு.