நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு! இப்தார் விழா புறக்கணிப்பு! எடப்பாடியின் டெல்லி டென்ஷன்!

திடீரென நிர்வாகிகளை அழைத்து பேசியதுடன் சென்னையில் நடைபெற்ற அதிமுக வின் இப்தார் நோன்பு திறப்பு விழாவையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, மத்திய அமைச்சரவையில் தனது ஆதரவாளரை இடம்பெறச் செய்ய முடியாமை போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி கவலைகள் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான லாபி அதிகமாகியுள்ளது எடப்பாடியின் டென்சனை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து நேற்று அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

உடனடியாக சென்னை புறப்பட்டு வருமாறு முதலமைச்சர் முக்கியமான விஷயங்கள் குறித்து பேச இருப்பதாகவும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் அனைவரும் காலை 10 மணிக்கே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது அவர்களுடன் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இணைந்து கொண்டார். கட்சி விவகாரம் என்றால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து பேசுவதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் வீட்டிற்கு திடீரென கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசுவதற்கான காரணம் புரியாமல் அனைவரும் விழித்தனர்.

பிறகுதான் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் தோல்விக்கான காரணங்கள் என்று கூறி சில அம்சங்களை பட்டியலிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. உளவுத்துறை மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் குறித்த தகவல்களை தேர்தல் தோல்விக்கான காரணமாக எடப்பாடி பழனிச்சாமி கூற ஒரு சில நிர்வாகிகள் அதனை ஏற்க முடியாது என்று மறுத்துள்ளனர். கூட்டணி பலமாக இல்லாததே பிரச்சாரம் செய்ய தலைவர்கள் இல்லாமை போன்றவை தான் தேர்தல் தோல்விக்கு பிரதான காரணம் என்றும் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் தோல்விக்கு காரணம் ஆகி விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி பிறகு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பொறுப்பாளர்களை தனியாக அழைத்துப் பேசினார். இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் நீடித்தது. ஒவ்வொரு தொகுதியாக ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார்.

இதன் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அதிமுக ஆண்டுதோறும் நடத்தும் மிக முக்கிய விழாவான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவே தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கொண்டே அந்த விழாவிற்கு வராதது கட்சியினரை மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமானவர்களிடம் கூறி அதிர வைத்தது.

காலையிலிருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை பிறகு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தது போன்றவற்றுக்கெல்லாம் காரணம் டெல்லி டென்ஷன் தான் என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு டெல்லிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு முன்பைப் போல் பலமாக இல்லை என்கிறார்கள். அதிகாரிகள் சிலர் ஏற்கனவே இருந்த அணிகள் இல்லாமல் மாறிய நிலையில் தற்போது தங்களுக்கான காரியங்களை எப்படி சாதித்துக் கொள்வது என்று தெரியாமல் எடப்பாடி தவிப்பதாகவும் ஒருவேளை டெல்லி நம்மைக் கைவிட்டு விட்டது என்று அஞ்சுவதாகவும் இதன் காரணமாகவே எடப்பாடி டென்ஷனில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் பார்த்து ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு இருக்கிறது.