தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவர் ரெடி. அறிவிப்பு எப்போது வரும்?

இந்தியாவை இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் நல்ல செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது.


ஆனால், தமிழகத்தில்தான் ஒரு தலைவரைக்கூட தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளது. எப்படியும் ரஜினியை தலைவர் பதவிக்கு கொண்டுவரலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது ராதாரவியும் நமீதாவும்தான். இந்த நிலையில் இன்று காலை ஹெச்.ராஜாவை தலைவராக அறிவிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் அறிவிப்பு வாபஸ் ஆகியுள்ளது.

ஏனென்றால் வரும் 20ம் தேதி பா.ஜ.க.வின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாஜகவின் தலைவராக தற்போது இருக்கும் அமித் ஷாவின் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட போதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவரே தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டார்.

 தேர்தலில் வென்று அமித் ஷா உள்துறை அமைச்சராகிவிட்டதால், தேசிய இளைஞரணித் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா பா.ஜ..கவின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து வரும் 20ம் தேதி தலைவருக்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதால், அவரே அன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார். அன்றைய தினமே தமிழகத்துக்கும் அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். கடைசிகட்டப் போட்டியில் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் நைனார் நாகேந்திரன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் ராஜாவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கிறதாம். விரைவில் ராஜா வருகிறார் பராக்...