ஈழ மண்ணை மீட்டே தீருவோம்! இன்னும் எத்தனை நாட்கள் இப்படி பேசிப்பேசியே ஈழத் தமிழர்களை டென்ஷன் ஆக்குவார் திருமாவளவன்!

சமீபத்தில் சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்றுவிட்டார்.


தமிழர்களின் வாக்குகளை வாங்காமலே வெற்றி பெற்றுவிட்டேன் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். இதையடுத்து இலங்கையில் ராணுவ கண்காணிப்பும் வெள்ளைவேன் தாக்குதலும் மீண்டும் அதிகரித்துவருகிறது. அதனால் எங்களைப் பற்றி இப்போது தமிழக தலைவர்கள் யாரும் பேச வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் மாவீரர் நாளில் பேசியிருக்கும் திருமாவளவன், மீண்டும் ஈழத்தை பிடித்தே தீருவோம் என்று பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொல்.திருமாவளவன் பேசியதன் சுருக்கமான பகுதி மட்டும் இங்கே. 

அமெரிக்க இரட்டைகோபுர மாளிகைகளின் தகர்ப்புக்குப் பின்னர், ஈழச்சிக்கல் வல்லரசுகளின் பாதுகாப்போடு தொடர்புடைய ‘சர்வதேசச் சிக்கலாகக்’ காணப்பட்டது. அதனால், மக்களோடு தொடர்பில்லாத அல்கொய்தா இயக்கத்தோடு மக்கள் இயக்கமான விடுதலைப்புலிகளையும் இணைத்துப்பார்க்கும் நெருக்கடிநிலை உருவானது.

வல்லரசுகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது என்னும் பெயரில் மக்கள் விடுதலைக்கான இயக்கத்தையும் அழித்தொழிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கூட்டுசேர்ந்து கொண்டன. அதன்விளைவாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறியது. விடுதலைப்புலிகள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் இலட்சக்கணக்கில் அழித்தொழிக்கப்பட்டனர்.

பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. இனப்படுகொலைக் குற்றவாளிகள் இராஜபக்சே குடும்பத்தினர் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக, தற்போது ஆட்சியதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டனர். தாயகத்தில் எஞ்சிய தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை.

தேசியப்பாதுகாப்பு என்னும் பெயரில் சிங்களப்படையினரின் கைகளில் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அதிகாரத்தையும் வழங்கும் வகையில் தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசும் சிங்கள அரசுடனான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே துடிக்கிறது.

இந்நிலையில், உலகத் தமிழர்களின் வருங்கால செயல்திட்டம் என்ன என்பதே தற்போது தீர்மானிக்கப்படவேண்டியதாகும். இராஜபக்சே குடும்பம் விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக மெத்தனமாக செயல்பட்ட ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்க்கவும்,

அவர்களின் ஆதரவை வென்றெடுக்கவும், இந்தியாவின் பகைமையைத் தவிர்க்கவும், தமிழீழத்தை வென்றெடுக்கவும் கூடிய வகையில் நமது அரசியல் கொள்கைகளை வரையறுத்து, அவற்றுக்கான வருங்கால செயல்திட்டங்களை வகுத்திட மாவீரர் நாளான இந்நாளில் நாம் உறுதியேற்போம். ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும் என்று முழங்கியுள்ளார்.