டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகளை கூட படிக்கும் மாணவன் ஈவ் டீசிங் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
ஈவ் டீசிங்: ஸ்மிருதி இரானி மகளுக்கு ஸ்கூலில் ஏற்பட்ட கொடுமை!
சில நாட்கள் முன்பாக, இன்ஸ்டாகிராமில், தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தில், ஸ்மிருதியின் மகள் கேவலமாக இருப்பதாகக் கூறி சக மாணவன் ஒருவன் வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தின் பேரில் சக மாணவர்கள் அனைவரும் ஸ்மிருதியின் மகளை கிண்டல் செய்யவும் அந்த மாணவன் தூண்டிவிட்டுள்ளான். இத்தகவல் தெரியவந்ததும் உடனடியாக, தனது மகளுடன் இருக்கும் புகைப்பட பதிவை ஸ்மிருதி இரானி டெலிட் செய்துவிட்டார். ஆனால், அதன் பிறகும் அந்த மாணவன் தனது கேலி, கிண்டலை நிறுத்தவில்லையாம். இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில், தனது மகளின் புதிய புகைப்படம் ஒன்றை ஸ்மிருதி இரானி மீண்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தின் கீழே, தனது மகளை சீண்டிய அந்த மாணவன் பற்றி, கண்டனம் தெரிவித்துள்ளார். ''எனது மகள், விளையாட்டில் ஆர்வம் உடையவள், அத்துடன் கராத்தேவில் பிளாக் பட்டம் வாங்கியுள்ளார். அவள் இதுபோன்ற கேலி, கிண்டல்களால் சோர்ந்து விட மாட்டாள்.
ஒருநாள் என்னை பெருமையடைய செய்யும் வகையில் ஏதேனும் சாதனை நிகழ்த்துவாள். அவள் ஸ்மார்ட் மாணவி. தனது பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவாள்,'' என்று ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் மகளையே கிண்டல் செய்த தைரியசாலி யார் என்றுதான் தற்போது இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரும் தலையை சொரிகிறார்கள்.