துணை முதல்வர் பதவி ஏன் கிடைக்கலைன்னு தெரியுமா?
யாருய்யா இந்த பவன் கல்யாண்…?
ஆந்திராவின் துணை முதல்வராக திரைப்பட நடிகர் பவன் கல்யாண் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கேபினட் அந்தஸ்து அமைச்சர் பதவி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பவன் கல்யாண்..?
இவர் ஆந்திர சினிமாவின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி தான் இந்த பவன் கல்யாண். இவர் கடந்த 1996ம் ஆண்டு வெளியான, ’அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி’ என்ற படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். தனக்கென தனி ஸ்டைலை கடைப்பிடித்து தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருமாறினார்.
இவருடைய அரசியல் அண்ணன் சிரஞ்சீவியின் மூலம் தொடங்கியது. கடந்த 2008ம் ஆண்டு சிரஞ்சிவீ தொடங்கிய பிரஜா ராஜ்யம் பார்ட்டியில் இளைஞர் அணித் தலைவராக பவன் கல்யாண் இருந்தார். அந்த கட்சியை சிரஞ்சீவி காங்கிரஸில் இணைத்ததும் இவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
அதன் பிறகு 2014ம் ஆண்டு ஜனசேனா கட்சியை நிறுவினார் என்றாலும் அப்போது தேர்தலில் போட்டியிடாமல் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்தார். அதன் பின்னரும் கட்சிப் பணிகளில் அதிக வேகம் காட்டாமலே இருந்தார்.
2019 தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் அந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களுடன் மிகப்பெரிய பெரும்பான்மையை வென்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 5% வாக்குகளை மட்டுமே பெற்றது, எனவே இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணியை பவன் கல்யாண் முறித்துக் கொண்டார்.
2024 தேர்தலில் சந்திரபாபு நாயுடுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதை கணக்கிட்டு அவருடன் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுக்கும் பவன் கல்யாண் சமூகத்தினரின் ஆதரவு தேவைப்பட்டதால் கூட்டணிக்கு முன்வந்தார். இந்த தேர்தலில் பவன் கல்யாண் கட்சிக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 மக்களவை இடங்களை மட்டுமே கொடுக்கப்படும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டார். போட்டியிட்ட அத்தனை இடங்களையும் பவன் கல்யாண் கட்சி வென்றுவிட்டது.
இந்த தேர்தலில். தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனவே, ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பண்டி சஞ்சய் குமார் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர்.
பவன் கல்யாணுக்கு கேபினர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனசேனாவுக்கு மூன்று கேபினட் பதவிகளும், பாரதிய ஜனதாவுக்கு ஒரு பதவியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிரஞ்சீவி, ரஜினிகாந்த், நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போதிய அனுபவம் இல்லை என்பதால் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் அனுபவம் அடைந்தவுடன் துணை முதல்வராக வாய்ப்பு உண்டு என்கிறார்கள். ஆனாலும், பவன் கல்யாண் ஆதரவாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.