ஏ.ஆர்.ரஹ்மான் மதம் தான் அவர் பல இடத்தில் புறக்கணிக்கப்பட்டதற்கு காரணமா ..? யாரை குற்றம் கூறுகிறார் ?

திறமைக்கு எப்போதும் மதிப்பு உண்டு என்பதை நம்புபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இப்போது அவரது மதத்தின் காரணமாக அவருக்கு வரும் இந்திப்பட வாய்ப்புகள் தடுக்கப்படுவதாக குற்றம் கூறியிருக்கிறார்.


இதுவரை யார் மீதும் குற்றம் கூறாத ரஹ்மான் திடீரென இப்படி பேசியது ஏன் என்று பிரபல எழுத்தாளர் தொல்காப்பியனின் பதிவு இது. தனது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, தான் ஒரு போதும் சாதி ரீதியாக புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தனது சாதியை வைத்து தான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக இசுலாத்திற்கு மாறிக் கொண்டவர் ஏ.ஆர். ரஹ்மான்.

ஆனால், தனது மதமே தனக்கு தடையாக வந்து நிற்கும் என்று அவர் எதிர்பார்க்க வில்லை போலும். இது போன்ற ஒரு குற்றச் சாட்டை இப்போது அவர் பொது வெளியில் வைத்து இருக்கக் கூடாது. 

இது போன்ற தடைகள் எல்லா ஆளுமைகளும் ஒவ்வொரு கால கட்டத்தில் சந்தித்தே வந்திருக்கிறார்கள். இது ஒரு தவிர்க்க முடியாத முரண். அப்படி இருக்க, இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும், இத்தனை சாதனைகளுக்குப் பிறகும், இத்தனை சம்பாத்தியங்களுக்குப் பிறகும், இத்தனை செல்வாக்குகளுக்குப் பிறகும், இத்தனை புகழுக்குப் பிறகும் இதுபோன்ற ஒரு குற்றச் சாட்டை திரு.ரஹ்மான் அவர்கள் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம் என்பதே எனது கருத்து!

நமது கண்முன்னே இசை ஞானி இளையராஜா எத்தனை எத்தனையோ இன்னல்களை, அவமதிப்புக்களை, புறக்கணிப்புக்களை சந்தித்து வந்து இருக்கிறார்! ஆனால், ஒரு போதும் அவர், எவர் மீதும் துளி அளவு கூட குற்றம் சாட்டியது இல்லை.

இதனால் தான் அவர் சாதனையாளர்! ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும், ஒவ்வொரு சாதனையாளனுக்குப் பின்னாலும் பெருத்த அவமானங்கள் ஒளிந்து இருக்கின்றன என்பதுதான் உண்மை! எவரும் எந்த இடத்தையும் எளிதாக அடைந்து விட வில்லை என்று கூறியிருக்கிறார்.