முத்தலாக் தடைக்கு ஓகே! ராமர் கோவிலுக்கு நோ! ஜனாதிபதி சுளீர்

தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வருபவர்கள் கூவத்தை ஒழிப்போம் என்று சொல்வது போன்று டெல்லியில் பதவிக்கு வருபவர்கள் சொல்லும் முதல் கோஷம், கங்கையை தூய்மைப் படுத்துவோம் என்பதுதான்.


இன்று தொடங்கிய மக்களவைக் கூட்டத்தொடரிலும் மங்களகரமாக, இதே கோஷத்தை மோடியின் அரசுக்காக தொடங்கிவைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இன்று அவர் பேசிய முக்கியமான அம்சங்கள் இவைதான். 

வேலை இல்லாத திண்டாட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முடியாத வகையில் முதலில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கப்படும். என்று அறிவித்தார் ஜனாதிபதி. மேலும் நாட்டின் எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் முக்கிய அங்கம் வகிப்பார்கள் என்றார்.

அடுத்தது பா.ஜ.க.வின் முக்கியமான திட்டத்தை வாசித்தார். முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால் முத்தலாக் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், ராமர் கோவில் பற்றி எந்த பேச்சும் இல்லை, ஒருவேளை அடுத்த தேர்தலுக்கு எடுப்பார்களோ என்னவோ..?

பெண் குழந்தையைப் பாதுகாப்போம் திட்டத்தின் மூலம் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. கிராமங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். * 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்திய கொண்டு வரப்படும்.  கேலோ திட்டத்தின் மூலம் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

இந்தியாவில் தொழில் தொடங்குவது, தொழில் செய்வது எளிதாகியுள்ளது. நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.  விண்வெளித் துறையில் சாதனை நிகழ்த்தப்படும், விண்வெளி மூலம் நாடு பாதுகாக்கப்படும் என்று பேசியிருக்கிறார் குடியரசுத் தலைவர்